மும்பை:
யோகா சாமியார் ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2006ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனம் தனது ஆண்டு வருவாயான 10 ஆயிரம் கோடியை வரும் மார்ச் இறுதிக்குள் இரட்டிப்பாக இலக்கு நிர்ணயம் செய்து செயல்படுகிறது.
இந்த நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசு நாக்பூரில் 230 ஏக்கர் நிலத்தை 66 ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பில் இருந்து 75 சதவீத தள்ளுபடியில் மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது. தற்போதைய மதிப்பின் படி அந்த நிலம் ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாயாகும். ஆனால் பதஞ்சலிக்கு ரூ. 58.63 கோடிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் பதஞ்சலி நிறுவனம் உணவு பூங்கா அமைக்கவுள்ளது. அம்மாநில அரசு இந்த முடிவை எடுத்ததில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
இந்த நில ஒதுக்கீடு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3வது வாரத்தில் நிதி சீரமைப்பு முதன்மை செயலாளர் பிஜய்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் கொண்ட இவரது பதவி காலம் தற்போது ஒரு ஆண்டு மட்டுமே முடிந்துள்ள நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தலைவராக கொண்ட மகாராஷ்டிரா விமானநிலைய மேம்பாட்டு கழகம் இந்த நில ஒதுக்கீடுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பட்னாவிஸ் கூறுகையில்,‘‘ இந்த முடிவு வெளிப்படையான முறையில் தான் நடந்துள்ளது. திறந்த முறையில் ஏலம் விடப்பட்டு தான் வழங்கப்பட்டுள்ளது. பிஜய்குமார் இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமான நடைமுறை தான்’’ என்றார்.
பிஜய்குமார் இடம்பெற்ற 4 பேர் கொண்ட துணை கமிட்டி தான் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. நாக்பூர் மிஹான் விமான நிலையப் பகுதியில் உணவு பூங்கா அமைப்பதற்காக இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த துணை கமிட்டி நடத்திய கூட்ட விபரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. அதில், நிலத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் 40 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்க குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் இதர மாநிலங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் அடிப்படையில் 58 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்ப்டடது. மேலும், இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் இதற்கு அருகில் உள்ள ஆயிரத்து 30 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவில் உள்ள 3 உறுப்பினர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பிஜய்குமார் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் குழுவின் இந்த முடிவையே மகாராஷ்டிரா விமானநிலைய மேம்பாட்டு கழகமும் எவ்வித கணக்கீடும் இன்றி அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது.