மும்பை
மகாராஷ்டிர பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள இந்திரா, ராஜிவ் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே சட்டசபையில் உறுதி அளித்தார்.
மகாராஷ்டிரா கல்வித்துறை வெளியிட்டுள்ள ஒன்பதாம் வகுப்பு சரித்திரப் பாட புத்தகத்தில் போஃபோர்ஸ் ஊழல் என்னும் தலைப்பில் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியைப் பற்றி பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள உள்ளன என மேலவையில் புகார் கொடுத்தார் காங்கிரஸ் எம் எல் சி சஞ்சய் தத்.
இது குறித்து மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் பல போஸ்டர்களை ஒட்டியது. பா ஜ க அரசு திட்டமிட்டே இந்திரா காந்தியின் குடும்பத்துக்கு அவப்பெயர் விளைவிக்க இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியது. மேலும் இதற்காக கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே பதவி விலகவேண்டும் எனவும் கூறியது. மேலும் இலங்கை போன்ற பல வெளியுறவு விவகாரங்களில் ராஜிவ் செய்த சாதனை பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் கண்டனத்தை தெரிவித்தது.
இது குறித்து மேலவையில் நடந்த விவாதத்தின் போது கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே, “உறுப்பினர்களின் உணர்வை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நான் இதை பாடப்புத்தகக் கழகத்துக்கு தெரிவித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன். விரைவில் உறுப்பினர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும்” என தெரிவித்தார்.