மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அங்கு பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை இங்கு 29.53 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இதில் 55,656 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 24.95 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 4.01 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 50000 ஐ நெருங்கி வருகிறது.
இதையொட்டி மகாராஷ்டிர மாநில அமைச்சரவை கூட்டத்தில் வார இறுதி மற்றும் இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மிகவும் கடுமையான அளவில் இருக்கும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மகாராஷ்டிராவில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையொட்டி மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல தொடங்கி உள்ளனர்.
இது குறித்துப் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், “மீண்டும் மற்றொரு முழு ஊரடங்கு வரலாம் என நாங்கள் அஞ்சுகிறோம். சென்ற முறை நாங்கள் பணம் இன்றி தவித்ததால் எங்கள் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். எங்கள் வருமானமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் நாங்கள் சொந்த ஊர் திரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.