டில்லி

காராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியுடன் டில்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.   முதல்வர் பதவியை இரு கட்சிகளும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர வேண்டும் என சிவசேனா கட்சி நிபந்தனை விதித்துள்ளது.    ஆனால் இதை பாஜக ஒப்புக் கொள்ள மறுத்துள்ளது.   மாறாக சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க பாஜக முன் வந்த போது அதை சிவசேனா ஏற்கவில்லை.

இந்நிலையில் சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.   காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருடன் சிவசேனா கட்சியின் சஞ்சய் ரவுத் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.   அந்த சந்திப்பில் பேசியது குறித்துஇரு தரப்பும் விவரம் அளிக்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகிப் தரோட், அசோக் சவான் மற்றும் பிரித்விராஜ் சவான் ஆகியோர் சரத் பவாரை சந்தித்துள்ளனர்.   அப்போது அவர் சிவசேனா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைமையிடம் பேசுமாறு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மூன்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களும் தற்போது விமானம் மூலம் டில்லிக்கு வந்துள்ளனர்.  விரைவில் அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்ஹ்டு ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.