தவறான படம்.. “ஹேக்” என சமாளிப்பு: பாஜக பெண் பிரமுகருக்கு நெட்டிசன்கள் கண்டனம்

பா ஜ க பெண் பிரமுகர் ஷைனா

ண்டிகர்

தவறான படத்தை வெளியிட்டதாக எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக பாஜக பெண் பிரமுகர்  ஷைனா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநில  பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து தனக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் வர்ணிகா காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் பிறகு ஜாமீனில் விடப்பட்டனர்.

இந்த நிலையில் “குற்றவாளிகளான அந்த இருவரையும் ஆளும் பாஜக அரசு தப்பிக்க உதவுகிறது. கடுமையான வழக்கு பிரிவுகளுக்குப் பதிலாக சாதாரண வழக்குகளே இருவர் மீதும் பதியப்பட்டுள்ளது” என்று பல தரப்பிலும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவருடன் வர்னிகா இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்கலில் வைரலாகியது.

தவறான புகைப்படம்

இந்த புகைப்படத்தை முதலில் பகிர்ந்தவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த். அவர் அந்த புகைப்படத்தில் வர்னிகாவுடன் உள்ளது கைது செய்யப்பட்டுள்ள விகாஸ் பராலா, மற்றும் ஆஷிஷ்குமார் என தெரிவித்தார். இவர்கள் மூவரும் ஏற்கெனவே நட்புடன் பழகியவர்கள் என்றும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்த புகைப்படத்தை பலரும்  பகிர ஆரம்பித்தார்கள்.

அவர்களில் ஒருவர் மகராஷ்டிரா பாஜக முக்கிய பெண் பிரமுகரான ஷைனா ஆவார். அதோடு, “இப்படிப்பட்ட பெண்ணான வர்னிகா, தான் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார். உண்மையில் நீதி கிடைக்க வேண்டியது  புகார் கூறப்பட்டிருக்கும் விகாஸ் பராலாவுக்குதான்: என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே குறிப்பிட்ட அந்த புகைப்படம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணான வர்னிகா கருத்து தெரிவித்துள்ளார். அவர், “அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் விகாஸ் மற்றும் ஆஷிஷ்  இல்லை. வேறு நண்பர்கள்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொய்யான புகைப்படத்தை பரப்பியதாக பாஜக பெண் பிரமுகர் ஷைனா மீது பலரும் புகார் கூற ஆரம்பித்தனர். உடனே ஷைனா அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கவிட்டார்.

மேலும், “கடந்த சில நாட்களுக்கு முன்பாக என் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

“ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். அது குறித்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக, பொய்யான படங்களை பதிவிடுகிறார் பாஜக பெண் பிரமுகர் ஷைனா. கண்டனம் எழுந்தவுடன் அந்த படத்தை நீக்கிவிட்டு, தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்கிறார். இது நம்பும்படியாக இல்லை.  இந்த விவகாரத்தில் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்பதே முறை” என்று சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டுவருகிறார்கள்.
English Summary
Maharashtra BJP spoke person shaina who posted fake photo is now informing that her twitter page had been hacked