மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை என மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ளது. 55 எம்எல்ஏக்களைக் கொண்ட சிவசேனா கட்சியில் 40க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழும் சூழல் எழுந்தது. இதையடுத்து, இன்று மாலை 5மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார்.
ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா கட்சியின் கொறடா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று உச்சநீதி மன்றத்தில் பரபரப்பாக விசாரணை நடத்தப்பட்டு, இரவு 9மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், உத்தவ் தாக்கரே அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது.
இதனால், ஆட்சி கவிழ்வது உறுதியான நிலையில், நேற்று இரவே முதல்வர் பதவியில் இருந்தும், எம்எல்சி பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதனால், மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கலைந்தது.
இதையடுத்து, ஆளுநர் உத்தரவுபடி, இன்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வர் பதவியையும், எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்துள்ளார். அதனால், ஆளுநர் உத்தரவின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை, எனவே இன்றைய சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படாது என அனைத்து மாநில எம்எல்ஏக்களுக்கும் தெரிவித்துள்ளார்.