மும்பை

காராஷ்டிரா சிவசேனா அரசு அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜி நகர் என்னும் பெயரில் குறிப்பிட்டது  கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பல ஆண்டு காலமாக சிவசேனா கட்சி பாஜகவும் கூட்டணி வைத்திருந்தது.  தற்போது அக்கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது.  கூட்டணிக் கட்சிகளை மாற்றினாலும் சிவசேனாவுக்கு இன்னும் பாஜக வின் நடைமுறைகளைப் பின்பற்றும் வழக்கம் மாறாமல் உள்ளது.

நீண்ட காலமாக அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர் எனப் பெயர் மாற்றம் செய்ய பாஜக முயன்று வந்தது.  இதற்கு சிவசேனாவும் ஆதரவு அளித்தது.  சமீபத்தில் அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மகாராஜ் விமான நிலையம் என மாற்ற மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.  இது கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பை உண்டாக்கியது.

அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகள் அதிகரிப்பது மற்றும் 300 பணியிடங்களை உருவாக்குவது குறித்து அரசு ஒப்புதல் அளித்தது.  இந்த தகவலை உத்தவ் தாக்கரே வெளியிட்ட போது சாம்பாஜி நகர் எனக் குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் அவுரங்காபாத் என அறிவித்திருந்தார்.  இது கூட்டணிக் கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான பாலாசாகேப் தோரட் தனது டிவிட்டரில், “நகரங்களின் பெயர்களை மாற்றுவது பொதுவான குறைந்த பட்ச திட்டத்தில் கிடையாது என்பதால் பெயர் மாற்றத்தை ஏற்க முடியாது.  சத்ரபதி சிவாஜி எங்களின் மதிப்புக்குரியவர்;.  அவர் பெயரால் அரசியலில் ஈடுபட வேண்டும்.  அவுரங்காபாத் முன்னேற்றத்துக்கு அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்” எனப் பதிந்துள்ளார்.