வுரங்காபாத்

காராஷ்டிரா மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் 15 பேர் ரயில் ஏறி மரணம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் 20 பேர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முயன்றுள்ளனர்.   போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவர்கள் ரயில் தண்டவாளம் வழியாக நடந்தே சென்றுள்ளனர்.  தற்போது ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் அச்சமின்றி பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் அவுரங்காபாத் அருகே வந்த போது இரவாகி விட்டபடியால் தண்டவாளத்திலேயே படுத்து உறங்கி உள்ளனர்.   தற்போது ரயில்கள் ஓடாது என்னும் நம்பிக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்கி உள்ளனர்.   தற்போது சரக்கு ரயில்கள் மட்டும் இயங்குவது அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே பயமின்றி தண்டவாளத்தில் தூங்கி உள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 5.15 மணிக்கு அந்த வழியாக வந்த ஒரு ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த இவர்கள் மீது ஏறியதில் 15 பேர் அங்கேயே உயிர் இழந்துள்ளனர்.  ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அதிர்ச்சி அடைந்த மீதமுள்ள நால்வருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.  இந்த தண்டவாளம் முழுவதும் இறந்தவர்களின் செருப்புக்கள், உடைமைகள், உணவுகள் ஆகியவை சிதறிக் காணப்படுகிறது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விபத்து விவரம் தெரிவிக்கபட்ட்டுள்ளது.   அந்த செய்தியில் ரயில் ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயன்றும் முடியவில்லை என தெரிவிக்கபட்டுள்ள்ளது.  தொழிலாளர்கள் மரணத்துக்கு ம பி முதல்வர் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.  காயமடைந்தோரின் சிகிச்சை குறித்து அவர் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசி உள்ளார்.

பிரதமர் மோடி அளித்துள்ள இரங்கல் செய்தியில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு அளிக்கும் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் எனவும் இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தாம் பேசியதாகவும் அவர் இந்த விவாகரத்தைக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.