கொரோனா கொடையாகத் தந்த  இயற்கை வழி கர்ப்பத்தரிப்பு

சென்னையைச் சேர்ந்த ஐடி தம்பதியினர், திருமணமாகி மூன்று நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் குழந்தை பேறு மருத்துவரை அணுகிய போது இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த ஊரடங்கினால் இருவருக்குமே வீட்டிலிருந்தே பணி  (WFH) செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் ஒரு நன்மையிலேயே முடிந்திருக்கிறது.  ஏப்ரல் மாத கடைசியில் அந்த பெண் இயற்கையாகக் கர்ப்பமடைந்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது அத்தம்பதியினருக்கு.

இவர்கள் மட்டுமல்ல.  இவர்களைப்போல ஆயிரக்கணக்கான தாய்மார்கள் எந்த செயற்கை முறைகளும் இல்லாமல் இயல்பான வழிகளில் கர்ப்பம் தரித்திருப்பிற்குப் பெரிதும் காரணமாக இருந்திருப்பது இந்த கொரோனா ஊரடங்கு தான்.

“பொதுவாக இருவருமே பணிக்குச் செல்லும் சூழலில் தம்பதிகளின் அன்யோன்யம் என்பதே கேள்விக்குறியாகி விட்டதும், பணி நிமித்தமான மன உளைச்சல் மற்றும் பணி இலக்கு ஏற்படுத்தும் அழுத்தம் இவையனைத்தும் அவர்களின் தாம்பத்யத்ய வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தே வந்திருக்கிறது.  ஒருவருக்கொருவர் மனதளவில் ஈடுபாடு காட்டமுடியாத கடின சூழலில் குழந்தைப்பேறு பெற செயற்கை வழிகளை நாட வேண்டிய கட்டாயத்தை அளித்திருந்த சூழலில், இந்த ஊரடங்கு பெரும்பாலான தம்பதியினருக்கு மன உளைச்சல் ஏதுமில்லாத நேரத்தை நிறைய வழங்கியது ஒரு முக்கிய காரணியாக உதவியுள்ளது” என்று தெரிவிக்கிறார் மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ்.

“சமீபமாக எங்களிடம் வந்த தம்பதியினருக்குப் பரிசோதனைகளை நடத்தி செயற்கை முறை கருத்தரித்தலுக்கு வேண்டிய அனைத்தையும் செய்திருந்த சூழலில் திடீரென வந்த இந்த எதிர்பாராத ஊரடங்கு நிறையத் தம்பதியினர் இயற்கை முறையில் கர்ப்பம் தரிக்கக் காரணமானது தெரிய வந்துள்ளது.  இதிலிருந்து தெளிவாகத் தெரியவருவது, செயற்கை முறை கர்ப்பம் என்பதே நாமே வலிய ஏற்படுத்திக்கொள்வது தான்.  பொறுமையுடன் இயல்பான இயற்கை வழிகளை முயல்வது நிறைய மருத்துவ ரீதியிலான பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்” என்கிறார் மகப்பேறியல் மருத்துவர் உமா ராம்.

அதிகமான இழப்புகளைத் தந்த இந்த கொரோனா மனிதனை இயற்கை வழிகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் உணர்த்த தவறவில்லை என்பதும் உண்மை தான்.

– லெட்சுமி பிரியா