சென்னை:  இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும்.
மகாளய பட்சம்  காலம்  வருடத்தில்  ஒருமுறை  விசேச நாட்களாகும்.  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களும் மகாளாய பட்சம் தினங்களாக அனுசரிக்கப்பட்டுகிறது.  இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.
அதன்படி, மகாளய பட்சம்   இன்று முதல் அக்டோபர் இரண்டாம் தேதி உள்ளது. புரட்டாசி அமாவாசைதான் மகாளய அமாவாசையாகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது நாளாக அன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல், பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். மறைந்த முன்னோர் 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்த நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களுக்கு ஒரு நாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம், அகத்தி கீரை கொடுக்கலாம். இக்காலத்தில் அன்னதானம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தர வல்லது.
எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, “காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
புராணங்களில் மகாளய பட்சம் :
1. கருடபுராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
2. ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
3. பசியின் கொடுமை பல தானங்களை செய்த கர்ணனையே வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாததுதான் என்று கூறப்பட்டது. எனவே, அந்தக் குறையைப் போக்க மீண்டும் பூலோகம் வந்து கர்ணன் அன்னதானம் செய்து திருப்தி அடைந்தது இந்த மகாளய பட்ச காலம் என்று மகாபாரதம் கூறுகிறது.
அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக !!!