வரும் 17ந்தேதி மகாளய அமாவசை வருகிறது. அன்றைய தினம், இந்துக்கள், மறைந்த முன்னோர் களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தர்பணம் செய்து மகிழ்விப்பர்.
பித்ருக்களுக்கு, புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு என்று இந்து சமயம் கூறுகிறது. இதனால், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்யவும், அக்னி தீர்த்தம் உள்பட கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் தொடர்ந்து தடை இருந்து வருகிறது.
கொரோனா ஊடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கோயில்கள் திறந்து, கடும் கட்டுப்பாடு களுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாளய அமாவாசை அன்று, தர்ப்பணம் கொடுக்கவோ, புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது, வருகிற 17-ந் தேதி புரட்டாசி மகாளய அமாவாசை நாளாகும். அன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர். தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கோவிலுக்குள் ஒருவர் பின் ஒருவராக சென்று வரவேண்டும்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அன்று ராமேசுவரம் கோவிலில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.