சென்னை: “‘மகாகவி பாரதியார்” பிறந்தநாளையொட்டி,  முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இன்று மறைந்த கவிஞர் பாரதியாரின் 142ஆவது பிறந்தநாள்  அரசு சார்பில் கொண்டாடப்படும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும், தங்களத வாழ்த்துச் செய்தியினை பதிவிட்டு வருகின்றனர். 

மகாகவி பாரதியார் அவர்களின் 142 – வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!” எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்! வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை! என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், தாய்மொழி தமிழை உயிராக நேசித்த மகாகவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சினம் கொண்டெழுந்த முற்போக்கு சிந்தனையாளர், இதழியல் புதுமையாளர், அந்நிய ஆட்சிக்கு அடங்க மறுத்து தன் எழுச்சிமிகு பாடல்களால் “ரௌத்திரம் பழகு” என்று உரக்க உரைத்தவர், நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்கக் கூடிய புதுமைப் பெண்கள் உருவாக விரும்பியவருமான முண்டாசுக் கவிஞர் #பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு என்று எண்ணி வியந்தவரும், வடபுலத்து நீரின் மிகையால் தென்னகத்தை செழிக்கச் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவரும், நாடும் வீடும் வாழ வேண்டுமென்று விரும்பியவரும், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கவிதை எழுதிய பன்மொழிப் புலவரும், சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று பாடிய தீர்க்கத்தரிசியுமான மகாகவி பாாதியாரின் பிறந்த நாளில் அவருக்கு எனது வீரவணக்கங்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பெரிதினும் பெரிது கேட்கும் ஆர்வம் கொண்டிருப்பதும், வையத்தலைமை கொள்ளும் மானுட பண்பை பெற்றிருப்பதும் வாழ்க்கையின் பெரும் பயன்கள் என்றுரைத்து புரட்சிகரமான கவிதைகள் மூலம் மக்கள் மனதில் தமிழ் உணர்வோடு விடுதலை உணர்வையும் விதைத்த சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று. பெண்களின் உரிமைக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து முதன்முதலாக குரல் எழுப்பியதோடு, அரசியல் களம், நாட்டின் விடுதலையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த முண்டாசு கவி பாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,   தமது எழுத்துக்களால், சுதந்திரப் போராட்டத்தில் வீரம் விதைத்த புரட்சியாளர், பெண்ணுரிமை, சமத்துவம், சமூகநீதி பேசிய முன்னோடி, மண் உள்ள காலம் வரை மறக்க முடியாத நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று. தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி. பன்மொழி வித்தகர். இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் கனவு, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகி வருகிறது. மகாகவியின் இறவாப் புகழ் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்  தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று பெண்ணுரிமைக்காகவும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று வீர முழக்கம் முழங்கி, கவிதையை போர்வாளாய் தீட்டி, மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டிய மகாகவி பாரதியின் பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.