அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,  திருவாரூர் மாவட்டம்.

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர் தன் மனைவி சுசீலா தேவியுடன் இத்தலத்தில் வசித்தார். இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார். இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற நினைத்தார்.

இந்நிலையில் சுந்தரருக்கு இருமல் ஏற்பட்டது. அவரைச் சந்திக்க முடியவில்லை. பலரும் வைத்தியம் செய்தனர். இருமல் தீரவில்லை. இதையறிந்த சோமாசிமாறர் அவரது நோய் தீர தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும்.

நோய் தீர்ந்ததும். நோய் தீர காரணமான கீரையைக் கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர். அப்போது சோமாசியார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.

இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள். பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர்.

உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும், சுசீலாதேவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

இங்கு ஆதி மனிதமுக விநாயகரும், ஆதி ஸ்கந்தரும் காட்சியளிக்கின்றனர். விநாயகர் சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்திற்கு மனித முகத்துடன் வந்ததால், அதே வடிவில் இங்கே தங்கியதாகச் சொல்வர். இந்த உலகத்தை 8 நாகங்கள் தாங்குவதாக சொல்வர். அதில் ஒன்று சிவனின் கழுத்திலுள்ள வாசுகி. அதற்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு உறையும் இறைவன் மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பவராக உள்ளார். உஜ்ஜயினி, திருமாகாளம், விழுப்புரம் அருகேயுள்ள இரும்பை ஆகிய தலங்களில் மட்டுமே இத்தகைய சிறப்புடைய மகாகாளேஸ்வரரைத் தரிசிக்க இயலும். காளி, நாகராஜன், ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் – ஐந்து நிலைகள். உள்ளே விசாலமான இடைவெளி. வலப்புறம் அலங்கார மண்டபம். இடப்புறம் மருதப்பர் சந்நிதி. பிராகாரத்தில் மோட்சலிங்கம், காளிகோயில் சிவலோக நாதர் சந்நிதி, யாகசாலை முதலியன உள்ளன. இரண்டாவது கோபுரம் அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படுகிறது. உள்ளே சென்றால் பிராகரத்தில் வன்மீகநாதர், சோமாசியார், அவர் மனைவி சுசீலை, அறுபத்துமூவர், விநாயகர், சுப்பிரமணியர், மேலே உயரத்தில் சட்டநாதர் சந்நிதி, மகாலட்சுமி, ஈசான ஜுரகரலிங்கங்கள், நவக்கிரகம், நடராச மண்டபம், சனீஸ்வரர், பைரவர், தண்டபாணி முதலிய சந்நிதிகளைத் தொழலாம்.
திருவிழா:
வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப் பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு.
பிரார்த்தனை:
மரண அவஸ்தையில் உள்ளவர்கள் இங்குள்ள மோட்சலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
திருமண தடையுள்ளவர்கள் அம்மனுக்கு இரண்டு அரளி மாலை சாத்தி அதில் ஒன்றைத் தங்கள் கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள்.
வழிகாட்டி:
மக்கள் இவ்வூரை கோயில் திருமாளம் என்று வழங்குகின்றனர். மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் வந்து அங்கிருந்து கடைவீதியருகே காரைக்கால் எனும் கைகாட்டி காட்டும் சாலையில், இரயில்வே கேட்டைத்தாண்டி 4 கீ.மீ வந்தால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.