சூப்பர் ஸ்டாரின் குருவுக்கே மகாகுரு: ஏ.சி.திருலோகசந்தர் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று

ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம் 1969ல் வெளியான தெய்வமகன். அப்பா, மகன்கள் என சிவாஜி மூன்று வேடங்களில் நடித்தார் என்பதைவிட அதகளம் செய்தார் என்பதே மிகப்பொருத்தமாக இருக்கும்.

பாவமன்னிப்பு படத்தில் சிவாஜி முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு கோரமான முகம் வெளிப்படும் காட்சியை உந்துதலாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் தெய்வமகன்.

குணச்சித்திர கட்டங்களில் சிவாஜிக்கு கடும்போட்டியை மேஜர் சுந்தர்ராஜனும் பண்டரிபாயும் ஏற்படுத்தியிருப்பார்கள்.. எல்லாவற்றிற்கும் மூல காரணம், படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள்தான்.

நடிகர்களை மட்டுமல்ல, வசனகர்த்தா ஆருர்தாஸ் இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் கவியரசு கண்ணதாசன் ஆகியோரையும் போட்டு பிழிந்தெடுத்திருப்பார். அப்படிப்பட்ட ஏசி.திருலோகசந்தர்.. (படிக்க வசதியாக ஏசிடி என்று வைத்துக்கொள்வோம்) அவர்களின் சாதனைகள்பற்றி இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்பது தெரியாது..

ஒரு முன்னணி ஹீரோவை வைத்து படம் இயக்கி வெளியிடலாம். ஆனால் அதே ஹீரோவின் இன்னொரு படம் வெளியாகும் அதே நாளில் வெளியிட துணிச்சல் வருமா? ஏசிடிக்கு அந்த துணிச்சல் இருந்தது.

ஒருமுறை அல்ல. மூன்று முறை சிவாஜியை இயக்கி அதே சிவாஜியின் வேறொரு படத்துடன் மோதவிட்டார்.. அதைவிட முக்கியமான விஷயம், ஏசிடியின் அந்த மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடின. இரு மலர்கள், எங்கிருந்தோ வந்தாள், டாக்டர் சிவா ஆகிய மூன்றுதான் அவை..


நடிகர் திலகத்துக்கும் ஏசிடி க்கும் இடையில் அப்படியொரு புரிதல் இருந்தது. அதனால்தான் நடிகர் திலகத்தை வைத்து இருபது படங்களை ஏசிடியால் வெற்றிகரமாக இயக்க முடிந்தது.
நிறைய மேல்நாட்டு படங்களை பார்த்து, இங்லீஷ் நாவல்களில் ஊறிப்போனவர் என்றாலும், ஏசிடியின் தமிழ் சினிமா பங்களிப்பு பாமர மக்களை நோக்கியே இருந்தது. மேதாவித்தனத்தை மட்டுமே காட்டுவேன் என்று அவர் என்றைக்குமே அடம் பிடித்ததில்லை.

அவர் படத்து திரைக்கதையில் குணச்சித்திர பாத்திரங்கள் மிக எளிமையாக புரிந்துகொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஜெமினி கணேசன் ராமு படத்தை பார்த்தால் இந்த உண்மைகள் விளங்கும். வாய் பேசமுடியாத ஒரு சிறுவனை மையமாக வைத்து உணர்ச்சிக் குவியல்களை கொட்டி ரசிகர்களை பல தடவை தியேட்டர்களில் உருகவைத்திருப்பார். கதைக்களத்தில் மட்டுமல்ல பாடல்களை படமாக்குவதிலும் புதுமையும் பாமரனை வியக்கவைக்கும் தன்மையும் அவரிடம் அபரிதமாக தலைதூக்கியிருப்பதை காணமுடியும்.

முதன் முதலில் ஏசிடி இயக்கிய படம் சச்சு கதாநாயகியாக அறிமுகமான வீரத்திருமகன். அந்த படத்தின் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமான இடங்களிலும் புதுமையான முறையிலும் படமாக்கியிருப்பார் ஏசிடி. ஏற்றுக தீபம் கார்த்திகை தீபம் என்ற பாடல், இருளாக கிடக்கும் பிரேமில், முழுக்க வாணவேடிக்கை வெளிச்சத்திலேயே ஆரம்பித்து துவம்சம் செய்யும்.
நீலப்பட்டாடை கட்டி நிலவென்னும் பொட்டும் வைத்து என்ற பாடலை ஒரு நீர்நிலையில் சுழலு தாமரை பீடங்களை அமைத்து அதன் மேல் தனித்தனியாக பெண்களை ஆடவிட்டிருப்பார்.

ஒன்பது பாடல்கள் கொண்ட அந்த படத்தில் பெரும் ஹிட் அடித்த ரோஜா மலரே ராஜகுமாரி உட்பட ஒவ்வொன்றும் ஒரு தினுசாய் இருக்கும் சொல்லப்போனால், டைரக்டர் ஷங்கர் அவர் படங்களில் பாட்டுக்கு காட்டிய வித்தியாசமான முயற்சிகளெல்லாம் அந்த நாளிலேயே காண்பித்து அசத்திய முன்னோடி ஏசிடி அவர்கள்.
இருபது சிவாஜி படங்களை இயக்கிய ஏசிடியின் ஆரம்பகாலம் யாருடன் துவங்கியது தெரியுமாஈ மக்கள் திலகம் எம்ஜிஆருடன்தான் என்பது வியப்பான தகவல்

1930ல் பிறந்த ஏசிடிக்கு கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறுயாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலேச்சிவந்த இயக்குநர் பத்மநாப ஐயர்.. அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார். ஏசிடி.1952ல் வெளியாகும் அந்த படம் எம்ஜிஆர் நடித்த குமாரி..

இதேபோல இன்னொரு ஜாம்பவான இயக்குநர் கே.ராம்நாத்திடமும் உதவி இயக்குநர் வேலை..

இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் விஜயபுரி வீரன் படத்தில் உதவி இயக்குநர் என்பதோடு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறார்.
ஆங்கில படங்களை பார்த்து அதன் தாக்கத்தில் விதவிதமான காட்சிகளையும் கதைகளையும் மனதில் வடிவமைப்பதில் ஏசிடி படு கில்லாடி..

சி.எல்.ஆனந்தன் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை) கதாநாயகனாக நடித்து ஜோசப் தளியத் இயக்கி1960-ல்வெளியான விஜயபுரி வீரன் படம் மெகா ஹிட்..படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் எஸ்.ஏ.அசோகனுக்கும் ஏவிஎம் நிறுவனத்திடம் நல்ல நட்புண்டு.. அதன் அடிப்படையில் ஏ.சி.டி திறமை பற்றி மெய்யப்ப செட்டியாரிடம் நடிகர் அசோகன் சொல்கிறார். இப்படித்தான் பின்னாளில் தாய்வீடாக மாறப்போகும் ஏவிஎம்மில் நுழைகிறார் ஏசிடி..

அதன்பிறகுதான் 1962ல் சி.எல்.ஆனந்தனை கதாநாயகனாகவும் நடிகை சச்சுவை கதாநாயகி யாகவும் வைத்து ஏவிஎம்முக்காக வீரத்திருமகனை இயக்குகிறார் ஏசிடி.. படம் படு ஹிட்..

இன்னொரு பக்கம் ஏசிடி கொடுத்த கதைதான் ஏவிஎம்மில் தயாரான சிவாஜி, ஜெமினி நடித்து நட்பின் பெருமையை சொன்ன பார்த்தால் பசி தீரும் படம். குழந்தை நட்சத்திரத்திலேயே கமல் இரட்டைவேடத்தில் கலக்கிய படம் இது..

1963ல் ஏசிடி-ஏவிஎம் காம்பினேஷனில் நானும் ஒரு பெண் படம். சிறந்த படம் என தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது.. சிவக்குமாரை முதன் முதலில் காக்கும் கரங்கள் (1965) என்ற படம் மூலம் திரையில் அறிமுகப்படுத்தியதும் ஏசிடிதான்.

ஏவிஎம் முதன் முதலில் வண்ணப்படம் தயாரிக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு அப்போதைய வசூல் சக்ரவர்த்தியான எம்ஜிஆருக்கே போனது.. அதற்குமுன் வெளியான நாகிரெட்டியின் எங்க வீட்டுபிள்ளை செய்து கொடுத்த வசூல் அப்படி..எம்ஜிஆரை வித்தியாசமான பாணியில் நடிக்க ஒப்பு க்கொ ள்ளவைத்து, ஏசிடியே இயக்கவேண்டும் என்று அடம்பிடித்தவர் நடிகர் அசோகன்தான்..

அம்மா சென்டிமெண்ட், ஹீரோயிசம். ஏராளமான சண்டைக்காட்சிகள், நீதிபோதனைகள் என எம்ஜிஆர் வழக்கமான படமாக இல்லாமல் அநியாயத்துக்கு கதையம்சத்துக்காகவே உருவான படம். ஹீரோ எம்ஜிஆரை பார்த்து காமெடியன் நாகேஷ், ‘’ஏன்டா காட்டான் முன்ன பின்னே போன்ல பேசியிருக்கீயா?’’, ‘’ இந்த வீட்ல கண்டவன்லாம் இருக்கான்.. உன்னையும் சேர்த்து’’ என்றெல்லாம் கலாய்த்த படம்.

ஏசிடி இயக்கி 1966ல் வெளியான அன்பே வா, 53ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களை சுண்டி யிழுக்கிறது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமோ? எம்ஜிஆருக்கு ஏவிஎம்மில் முதலும் கடைசியுமான படம் மாதிரி ஏசிடிக்கும் எம்ஜிஆருடன் அதுதான் கடைசிபடம்.

அன்பே வா காமடி பிளாக் பஸ்டர் என்றால் வேறுவகையான கலர்ஃபுல் த்ரில்லர் பிளாக் பஸ்டர் படம் ஏவிஎம்முக்காக ஏசிடி இயக்கிய அதே கண்கள். நடிகர் ரவிச்சந்திரனையும் காஞ்சனாவையும் வைத்து கண்கள்.. இளமை துள்ளல் காட்சிகளும் அதற்கேற்ப இனிமையான பாடல்களை பெற்று கோர்த்த விதம் அதே கண்கள் படத்தைப்பொருத்தவரை ஏசிடியின் இன்னொரு மைல் கல் என்றே சொல்லலாம்..

ஏசிடி இயக்கத்தில் டாப் என்றால் இரு மலர்கள் (1967) படத்தை சொல்லவேண்டும்..சிவாஜி, பத்மினி ஆகிய இருவருக்கும் இடையில் சாந்தி என்ற பாத்திரத்தில் துவம்சம் செய்திருப்பார் கே.ஆர். விஜயா.. யார் மீதும் தவறே இல்லாமல் ஆனால் படம் முழுக்க ஃபேமிலி திரில்லராய் அவர் படத்தை கொண்டுசென்ற விதம் ஆமாம். அது முழுக்க முழுக்க ஏசிடியின் திறமையால் மட்டுமே சாத்தியம்…

சிவாஜியின் பாபு படத்தில் விதவைதாய் வேடத்தை பற்றி தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் சௌகார் ஜானகி அவ்வளவு தூரம் ஏசிடியை புகழ்ந்து தள்ளுவார்.

விவிதபாரதி காலத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை என்ற பாடல் எவ்வளவோ பிரபலம். பாடல் ஒலிபரப்பு ஆகாத நாளே கிடையாது என்ற நிலைமை. ஆனால் பாடல் இடம் பெற்ற பத்ரகாளி என்ற அந்த படத்தை தயாரித்து இயக்கியபோது ஏசிடி சந்தித்த சோதனை முற்றிலும் விநோதமானது. இன்னும் சில காட்சிகளில் நடிக்கவேண்டிய கதாநாயகி ராணி சந்திரா, விமான விபத்தில் பலியாகி படம் வெளிவருவதையே கேள்விக்குறியாக்கிவிட்டு மேலே போய்விட்டார்.

பட யூனிட்டே நொந்துபோன நிலையில் தஏசிடி மட்டும் அசராமல் ராணி சந்திரா சாயலில் இருந்த புஷ்பா என்ற பெண்ணை நடிக்கவைத்து, எந்த இடத்தில் டூப் என்று ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படத்தை முடிக்க, அது வெற்றிப்படமாகவே அமைந்தது.

பாரத விலாஸ், அவன்தான் மனிதன், பத்ரகாளி, இலங்கையின் நாயகி மாலினி பொன்சேகாவை சிவாஜியுடன் ஜோடிபோட்டு சஸ்பென்ஸ் படமாக எடுத்த பைலட் பிரேம்நாத், ரஜினியுடன் வணக்கத்துக்குரிய காதலியே, நதியாவுடன் சிவாஜி கலக்கிய அன்புள்ள அப்பா என ஏசிடியின் இயக்குநர் பயணம் பெரியது என்பதைவிட வெற்றிகரமானது….

இன்றைக்கும் ஏசிடியை நீங்கள் பொதுவெளிகளில் உங்களையும் அறியாமலேயே அடிக்கடி ரசித்துக்கொண்டிருப்பீர்கள்.

‘’மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய்’’ என தென்றலை வருடி கேஜே ஜேசுதாஸ் பாடும்போதாகட்டும், ‘’இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரேயொரு புன்னகையை கண்டேனே’’ டிஎம்எஸ் பாடும் போதாகட்டும், கல்யாண கச்சேரிகளில் தவறாமல் பாடப்படும் ‘’ரோஜா மலரே ராஜகுமாரி’’ பாடலாகட்டும்… அவற்றை திரையில் மொத்தமாய் தந்த ஏசி திருலோகச்சந்தர்வசம் நீங்கள் வசப்பட்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இருபத்தைந்து படங்களை இயக்கிய எஸ்பி முத்துராமனுக்கு டைரக்சனில் குருவே ஏசி திருலோகச்சந்தர்தான்..

சிறப்புக்கட்டுரை – ஏழுமலை வெங்கடேசன்
.