பிரக்யாராஜ்: மகதா கும்பமேளாவையொட்டி,  திரிவேணி சங்கமத்தில்  புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டி உள்ளது. கும்பமேளா முடிய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், மேலும் 5 கோடி பக்தர்கள் புனிதாநீராடுகள் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் (ஜனவரி 2025)  13ஆம் தேதி தொடங்கியது. சுமார் 45 நாட்கள் நடைபெறும் இந்த  மகா கும்பமேளா வரும் பிப்ரவரி  26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கும்பமேளாவையொட்டி,   உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை 50கோடி பேர் புனித நீராடி உள்ளதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. மகா கும்பமேளாவுக்காக,  பக்தர்களின் வசதிக்காக  10,000 ஏக்கர் பரப்பளவில்  பல்வேறு ஏற்பாடுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது. நாள்தோறும் சராசரியாக 1.44கோடி பேர் மகா கும்பமேளாவில் புனித நீராடிவருவதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கும்பமேளா முடிய இன்றும் 10 நாட்கள் உள்ள நிலையில், இன்னும் குறைந்தது 5 கோடி போர் புனித நீராடுகள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 35 கோடி மக்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த முறை 45 கோடி முதல் 50 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அது மேலும் கூடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.

மகா கும்பமேளாவிற்கு வருகை தந்த பின்னர் கணிசமான எண்ணிக்கையிலான பக்தர்கள் வாரணாசி மற்றும் அயோத்தி நோக்கி செல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாகும்பமேளாவுக்கு அதிக அளவில் பக்தர்கள் சாலை வழியாக வருகின்றனர். இதனால், பிரயாக்ராஜுக்கு வரும் நெடுஞ்சாலைகள் அனைத்திலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி லக்னோ, வாரணாசி, கான்பூரில் இருந்து பிரயாக் ராஜ் வரும் நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கி தவிக்கின்றனர். சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சிக்கிய பல வாகனங்கள் 2 நாட்களுக்கு மேல் பிரயாக் ராஜ் வரமுடியாமல் தவிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மகாகும்பமேளாவில் இருந்து திரும்பும் பக்தர்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்நாதர் ஆலயத்துக்கும் வருகை புரிவதால் நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதேபோல் ஏராளமானோர் அயோத்திக்கும் செல்கின்றனர். இதனால் அயோத்தி ராமர் கோயில் மற்றும் ஹனுமன் கோயிலுக்கு செல்லும் சாலைகள் முடங்கியுள்ளது.