திருவண்ணாமலை: நாளை மகாதீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு, 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலைமீது தீபக் கொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது. பக்தர்கள் கொப்பறை மற்றும் அதற்கான திரி, நெய் போன்றவற்றை மலைமீது ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்த்திகை தீபத்திற்காக, தீபம் ஏற்றும் கொப்பரையானது 5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்டது. இந்த கொப்பரை கடந்த சில நாட்களாக செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்கான பூஜைகள் செய்யப்பட்டு இன்று மலைமீது ஏற்றும் பணி தொடங்கியத. இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மகாதீபம் ஏற்றப்படும் இந்த கொப்பரையை, தீப நாட்டார் என்று அழைக்கப்படுகின்ற பர்வதகுல ராஜ மரபினர் வம்சத்தினரான மண்ணு நாட்டார் குடும்பத்தினர், பாரம்பரியமாக ஆண்டுதோறும் புதுப்பிக்கும் பணியை இலவசமாக செய்து வருகின்றார்கள். திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்படும் கொப்பரை முழுவதும் செம்பு தகட்டால் ஆனது. கொப்பரையின் உயரம் 5 அடி, மொத்த எடை 170 கிலோ. இந்த கொப்பரையின் மேல் சுற்றளவு 120 அங்குலம், கீழ் சுற்றளவு 90 அங்குலம், மேல் விட்டம் 3.25 அடி, கீழ் விட்டம் 2.5 அடி. மேலும் இந்த கொப்பரையில் 6 செம்பு வளையங்கள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், நாளை மாலை ஏழரை அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும் போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டும் இதனையடுத்து வாண வேடிக்கை நடைபெறும். மலை மீது ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் தீபம் அணையாது என்பது அதிசயமாகும்.