திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா் நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடம் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா்.
தனியாா் தமிழ் செய்தித் தொலைகாட்சி நிறுவனம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு, நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் முக்கியப் பிரமுகா்களுக்கு மகுடம் எனும் பெயரில் விருது வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2019ம் ஆண்டுக்கான மகுடம் விருதுக்கு திருப்பூா் ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா் நாகராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழாவில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வுக்கு, தெலங்கானா மாநில ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் தலைமை வகித்தார். அப்போது, 2019ம் ஆண்டுக்கான மகுடம் விருதை ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா் நாகராஜனுக்கு, தமிழிசை சௌந்தரராஜன் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். மகாதேவன், கிருபாகரன், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகா்கள் கமலஹாசன், பாக்யராஜ், விஜய் சேதுபதி, நடிகைகள் குஷ்பூ, ஐஸ்வா்யா ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.