கோவை: மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் வனத்துறையினரின் முயற்சியின்போது, மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்றது. அப்போது வேகமாக ரயில் வருவதை அறிந்த வனத்துறையினர், சாதுரியமாக செயல்பட்டு, சத்தமிட்டு, மக்னா யானையை, ரயிலில் அடிபடாதவாறு, தண்டவாளத்தில் இருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தர்மபுரி பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியத்தைத் தொடர்ந்து, வனத்துநையினர் கும்கி உதவியுடன் மக்னா யானையை பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் கடந்த 5ஆம் தேதி விட்டனார். இதனால் மக்னா யானை காட்டுக்குள் சென்றுவிடும் என எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக மக்னா யானை அடுத்த நாளே, வனப்பகுதியில் இருந்து வெளியேறி, மலையில் இருந்து கீழே இறங்கி சேத்துமடை உள்ளிட்டப் பகுதியில் சுற்றி திரிந்தது. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுதொடர்பாக வனத்துறைக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர், மக்னா யானை, சேத்துமடை பகுதியில் இருந்து, பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு வழியாக புரவிபாளையம் வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்தை கண்டனர். அதை காட்டுக்குள் விரட்டியும், அதை கண்டுகொள்ளாத யானை, கோவை நகருக்குள் புகுந்தது. இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் இருந்து கோவைக்கு வந்த மக்னா யானை, மதுக்கரை அருகே திடீரென ரயில் தாண்டவாளத்தில் நின்றது. அதை அங்கிருந்த அகற்ற வனத்துறையினர் முயற்சித்து வந்த நிலையில், அந்த வழியாக அதிவேக ரயில் வருவதைக்கண்ட வனத்துறையினர் பதபதைத்தனர்.
இதையடுத்து யானையை காப்பாற்றும் வகையில் சத்தமிட்டு, அதை தண்டவாளத்தில் இருந்து விரட்ட முயற்சித்து வரும் வேளையில் ரயிலும் அதி வேகமாக வந்ததால், அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் வனத்துறையினரின் சத்தத்தால் சுதாரித்துக்கொண்ட மக்னா நொடிப்பொழுதில் தண்டவாளத்தில் இருந்து விலகி மறுபக்கம் சென்றது. இதனால் வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவில் இந்த வீடியோ இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவேளை, அந்த இடத்தில் வேகமாக வந்த ரயிலில் யானை அடிபட்டு இருந்தால் யானை உயிரிழப்பதோடு மட்டுமின்றி, ரயில் தடம் புரண்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். வனத்துறையினரின் சாதுரியமான செயல் பாராட்டப்பட்டு வருகிறது.