சென்னை: கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரைவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலை இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை முதன்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை 3 மாதங்களில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டெய்னர் செல்லும் வகையில் அமைக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
மதுரவாயல்- துறைமுகம் இடையே 1,530 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட காலம் அமைக்கப்படுவதாக மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, துறைமுகத்தின் 10 ஆம் எண் நுழைவாயில் தொடங்கி கோயம்பேடு வரை கூவத்தின் கரையோரமும், பின் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட தூண்களின் மேல் சுமார் 20 கிமீ தொலைவிற்கு பறக்கும் விரைவு சாலையாகவும் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம்.
ஆனால், இதற்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. முக்கியமாக சுற்றுச்சூழல் சான்றிதழ் வாங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், 50 க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டன. இதையடுத்து, பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இதில் சுற்றுச்சூழல் அனுமதி உள்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக முழுமையடையாமல் பாதியிலேயே நிற்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரென சுற்றுச்சூழலை காரணம் காட்டி இந்த மேம்பாலத் திட்டத்தை அடுத்து வந்த அதிமுக அரசு நிறுத்தியது.
இதனால், அந்த பாலத்திற்கான தூண்கள் பாதி கட்டியும் கட்டாமல் முடிவுறாத திட்டப்பணிகளால், போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால், இந்த பாலம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, கடந்தஅதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டு நவம்பரில் தமிழகம் வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமியுடன் இத்திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில், துறைமுகம்-மதுரவாயல் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்திற்கான புதிய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, முழுமையான திட்ட அறிக்கை தயாரிப்பு பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறங்கினர். இதையடுத்து, “ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர்தான் இரண்டடுக்கு மேம்பால திட்டதிற்கான வேலைகள் தொடங்கும். அதிகாரிகளிடம் திட்ட அறிக்கையை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கட்டுமானப் பணிகள் 2021 டிசம்பரில் தொடங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகஅரசு, மதுரைவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலை இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக மதுரவாயல் – துறைமுகம் இடையே இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமைப்பதற்கான சாலை திட்டம் அமைய உள்ளது.
அணுகுசாலை அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 3 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இரண்டு அடுக்குகளாக அமைய உள்ள சாலையில், முதல் அடுக்கில் வாகனங்கள், இரண்டாம் அடுக்கில் துறைமுகத்திற்கு செல்லும் கன்டெய்னர்கள் செல்லும் வகையில் அமைக்கப்படும்.
ஏற்கனவே திட்டமிட்டிருந்த பறக்கு சாலையில், 3 உள்நுழைவு வழிகள், 3 வெளியேறும் வழிகள் அமைக்கப்படும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கண்டெய்னர் லாரிகளின் 3மணி நேரப் பயணம் 30 நிமிடமாக குறையும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.