மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை ரூ.59லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் செயல்பட்டு வரும் அறநிலையத்துறை அலுவலகம் அமைந்துள்ள இடமானது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இந்த இடத்தை உபயோகப்படுத்தி வரும் அறநிலையத்துறை, முறையாக வாடகை பாக்கியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அலுவலகம் 2017-ம் ஆண்டு முதல் வாடகை அடிப்படையில் மண்டல அலுவலகம் கட்டப்பட்டு உபயோகத்தில் உள்ளது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், அறநிலையத்துறை தரப்பில் வாடகை இதுவரை செலுத்த வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, உடனே வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும் என ஆன்மிக பிரமுகர்களும், சமுக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை, எல்லீஸ் நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, அ.தி.மு.க., ஆட்சியில், மண்டல இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கு முன், இந்த அலுவலகம் தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்தது. இட பற்றாக்குறையால், 2017 ஆக., 6ல் காலி செய்யப்பட்டது. காலி செய்த போது, வாடகை பாக்கி செலுத்தவில்லை. அறநிலையத்துறையின் கீழ், மீனாட்சி கோவில் நிர்வாகம் இயங்குவதால், அதிகாரிகளும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே, தற்போதைய மண்டல அலுவலகம், 2017 முதல் எல்லீஸ் நகரில் இயங்கி வருகிறது. இதன் வாடகை விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தினகரன் என்பவர் கோவில் நிர்வாகத்திடம் கேட்டார். அதற்கு, 59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.