மதுரை:

துரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக திமுக எம்எல்ஏ  பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

மதுரை மத்தியத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான பழனிவேல் தியாகராஜன், மதுரை நகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், இதை ஒரு ‘ஊழல் திட்டம்’ என விமர்சித்து உள்ளார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி,  மதுரைக்கு  1,020 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம்  கடந்த ஜனவரி மாதம் துணைமுதல்வர் ஓபிஎஸ்-சால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்மூலம், பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ. 159.70 கோடி, மதுரை மாநகராட்சியில் வைகை ஆற்றங்கரை ஓரத்தை மேம்படுத்த ரூ. 81.41 கோடி, பழைய சென்ட்ரல் மார்கெட் அருகே பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க ரூ. 40.19 கோடி, புராதனச் சின்னங்களை இணைத்துப் புதிய வழித்தடம் அமைக்க ரூ. 21.70 கோடி, நான்கு சித்திரை வீதிகளையும் மேம்படுத்த ரூ. 15.24 கோடி, திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து, கூறிய திமுக எம்எல்ஏ தியாகரான், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் திட்ட மிடல் கட்டங்களில் பங்கேற்க இந்த தொகுதி எம்எல்ஏவான தனக்கு அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்றும், நடைபெறும் செயல்கள் அனைத்தும் மர்மமாக உள்ளன.

இந்த திட்டம் தொடர்பான செயல்களில்  வெளிப்படைத்தன்மை இல்லாததால், ஊழல் செய்வதற் கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒதுக்கப்பட்ட நிதியின் முழுப் பயன்களையும் என் தொகுதி மக்கள் அடைவார்களா என்று சந்தேகமாக உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து தான் ஆய்வு செய்ததாகவும், அப்போது,  முறைகேடுகள் நடைபெற்று உள்ளது தெரிய வந்துள்ளது என்றும், இந்த  முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.