மதுரை
தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமான மதுரை ரயில் நிலையத்து ஐ எஸ் ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை ரயில் நிலையம் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும் இங்கிருந்து பாண்டியன், வைகை, தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்தும் தென் மாவட்டஙக்ளில் இருந்தும் இயக்கப்படும் ரயில்கள் மதுரை மார்க்கமாகச் செல்கின்றன. தினம் சுமார் 90க்கும் மேற்பட்ட ரயில்கள் மதுரை ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.
தினசரி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சேரும் மதுரை ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளில் ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் முதலாவது நடைமேடையில் ஏசி ஓய்வு அறைகள், ஐஆர்சிடிசி தங்கும் அறைகள், இரண்டாம் வகுப்பு பயணிகள் காத்திருப்பு அறை, நிலைய மேலாளர் மற்றும் டிக்கட் பரிசோதகர்கள் அறை உள்ளன. மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு நல்ல வருவாய் ஈட்டி தருகிறது.
தற்போது மதுரை ரயில் நிலையத்துக்கு ஐ எஸ் ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதை அறிவித்த ரயில்வே அதிகாரிகள், “முறையான நேரத்தில் ரயில்களை இயக்குதல், சிக்னல்களை சிறப்பாகச் செயல்படுத்துதல், நிலையம், தொலைத்தொடர்புகளை நன்கு பராமரித்தல், கிழக்கு, மேற்கு நுழைவு வாயில்களை அழகுபடுத்துதல், டிக்கெட் முன்பதிவு மற்றும் அதிக பார்சல்களைக் கையாளுவதில் கவனம், சுற்றுச்சூழல் பேணுதல், பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறி உள்ளனர்.