மதுரை: வானிலை ஆய்வு மையம் குறித்து மத்தியஅமைச்சர் அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார் மதுரை எம்பி வெங்கடேசன் வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாட்டின் வானிலையை கணிப்பதில் எந்தவிதமான சமரசமும் செய்ய மாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
டிசம்பர் 30ந்தேதி அன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் திடீரென பலத்த மழை கொட்டியது. குறிப்பாக சென்னையில் வானத்தை பிளந்துகொண்டு தண்ணீர் கொட்டியதுபோல தொடர்ந்து 6மணி நேரமாக மழை பெய்தது. இதனால் சென்னை மீண்டும் தனித்தீவாக மாறி மக்களுக்கு கடுமையான இழப்பையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியது.
சென்னையில் பெய்த பலத்த மழைகுறித்து முன்னறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ விடுக்கப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக அரசும், வானிலை மையம் முன்னறிவிப்பு ஏதும் தரவில்லை என்று குற்றம் சாட்டியது. இதையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டது.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலை தகவல்களை கணிக்கும் சில கருவிகள் பழுதாக இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதுபோல தமிழக முதல்வரும், மத்தியஅரசை வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில்தான் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. அதைத்தொடர்ந்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதையடுத்து,செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், “செயற்கை கோள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மழை பெய்வது குறித்து கணித்து அறிவிக்கப்படும். ஆனால், காற்றின் மேலடுக்கு சுழற்சி, திடீரென இடம் மாறியது. இதனால், சென்னையில் கன மழை பெய்தது. இதைக் கணிப்பது சற்று கடினமானது. இந்த நடைமுறைப் பிரச்னையால், கன மழையைக் கணிக்க முடியவில்லை. காற்றின் வேகத்தை துல்லியமாக கணிக்க இயலாது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, சில நேரங்களில் வேகமாக கடந்து விடும். அப்படி நகர்ந்ததால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இது மேக வெடிப்பு அல்ல. இந்தகன மழைக்கு மேக வெடிப்பும் காரணமில்லை. மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன.” என்றார்.
இதையடுத்து, தமிழக முதல்வரும் இன்று உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், தான் எழுதிய கடிதத்திற்கு, மத்தியஅரசின் புவி அறிவியல் துறையின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்தர்சிங் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பதில் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “தமிழ்நாட்டின் வானிலையை கணிப்பதில் எந்தவிதமான சமரசமும் செய்ய மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்து, அந்த கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.