மதுரை:  மேலூரில் இஸ்லாமிய பெண் முகத்தை மூடிய ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்ததால், அவரது முகத்தை காட்டும்படி வேட்பாளர் ஏஜென்ட் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இதுவரை ஹிஜாப் அணியாத பலர் தற்போது ஹிஜாப் அணிந்து வருகின்றனர். அதுபோல, வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் முகவர்கள், வாக்காளர் சீட்டை சரிபார்க்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில்  உள்ள படமும், வாக்களிக்க வந்தவரும் ஒருவர்தானா என்பது சரிபார்க்கப்படும். இது நடைமுறை.

ஆனால், இன்று மதுரை அருகே உள்ள மேலூரில் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் முகத்தை மூடியபடி அணிந்திருந்த ஹிஜாபை, பூத் ஏஜென்ட் அகற்ற சொன்னதால் சலசலப்பு ஏற்பட்டது. வாக்காளர் அடையாள அட்டையும், வந்திருந்த பெண்ணும் ஒருவர்தானா என்பதை பார்க்க  வேண்டும் என்று அங்கிருந்த பாஜக ஏஜென்ட் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து  பாஜக ஏஜென்டின் செயலுக்கு மற்ற ஏஜன்டுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலரும், வாக்காளர் புத்தகத்தில் உள்ள படத்தில் இருப்பதும், அந்த பெண்ணும் ஒருவர்தான் என்று விளக்கினார்.  இதனால்,  அந்த வாக்குச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பாஜக ஏஜெண்டின் எதிர்ப்புக்கு இதற்கு திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக முகவர் வெளியேற்றப் பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், பொதுமக்கள், முகத்தை காட்டச்சொன்னதில் என்ன தப்பு என்றும், அப்போதானே ஓட்டுபோட வந்தவரும், அவர் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டையும் ஒன்றுதானா என்று சரிபார்க்க முடியும் என்று எதிர்கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.