சென்னை: 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
2026 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025 டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால 2 நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, அவையில் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். அந்த வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூவின் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர், செல்லூர் ராஜூ மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் வீர வசந்தராயர் கோவில் புனரமைப்பு பணிகள் எப்போது நடக்கும்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு பதில்: வீர வசந்தராயர் கோவிலில் 2018ல் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிறகு, அப்போதைய அரசால் நியமிக்கப்பட்ட குழு, 3 ஆண்டுகளில் சிறுசிறு பணிகளை மேற்கொண்டது. வீர வசந்தராயர் கோவிலுக்கு 25 அடி நீளம் கொண்ட கற்தூண்கள் தேவைப்படுகிறது. இதற்காக, ஒரே அளவான கற்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்கனவே, ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது. வெகுவிரைவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
மீனாட்சியம்மன் கோவில் பணிகளை பொறுத்தவரையில் 63 பணிகளில் 40 பணிகள் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சிய 23 பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயமாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று எங்களின் பக்தனான செல்லூர் ராஜூக்கு தெரிவித்துக் கொள்கிறேன், என்று சிரித்தபடியே கூறினார்.