மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் பணியாற்றிய கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், பட்டர்கள், இணை ஆணையர் நடராஜன், தக்கார் கருமுத்து கண்ணன் என அனைவரும் கொரோனா செய்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனோ வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ந்தேதி முதல் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள் உள்பட அனைத்து இடங்களும் மூடப்பட்டு உள்ளது. கொரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஏற்கனவே, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் கொரோனோ வைரஸ் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 25ந்தேதி தொடங்கவிருந்த நிலையில், அதை ரத்து செய்வதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாண உற்சவம், திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும், மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை www.maduraimeenakshi.org என்ற இணைய தளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 4ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.