மதுரை: தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து முனையாக செயல்பட்டு வரும், மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்தை மறுசீரமைக்க  தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக சு ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மதுரையில் ஆரப்பாளையம், பெரியார் நிலையம், அண்ணா பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இந்த பேருந்துகளில் இருந்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனித்தனியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் மதுரை பழங்காநத்தம் பகுதியில், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற தென்மாவட்டங்களுக்கு என தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

இதையடுத்து, பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு, அனைத்து வகையான பேருந்துகள் மற்றும், அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில்,  மதுரை மாட்டுத் தாவனி பகுதியில் பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.   இந்தபேருந்து நிலையத்தை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதி,  1999-ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக  திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையம்  தமிழகத்திலே இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால், பல பகுதிகளில் சேதமடைந்தும், இரவு நேரங்களில் இருளடைந்தும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.  அதுபோல,  பேருந்து நிலையத்தின் மேற்கூரை சிதிலமடைந்து அடிக்கடி காங்கீரிட் பூச்சு உதிர்ந்து விழுகிறது. கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி கடும் தூர்நாற்றம் வீசுகின்றன. பேருந்து நிலையத்தின் வளாகத்தில் உள்ள தார் சாலைகள், கற்கள் பெயர்ந்து பள்ளங்களாக காணப்படுகின்றன.

இதையடுத்து, இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க  வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த  நிலையில்,  மதுரை  மாநகராட்சி ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் என்பவர் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் வகையில்,  திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் அனுமதிக்கு அனுப்பினார். அப்போது, அதன் செலவு ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டிருந்து. அதற்கு நிதி ஒதுக்கியது. ஆனால், அதன்மூலம் பேருந்து நிலையம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து,  பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையராக வந்த தினேஷ்குமார், ரூ.14 கோடி நிதி கேட்டு புதிய திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார். தற்போது அவரது திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி ரூ.10.5 கோடி நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி நிர்வாகம் விரைவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மறுசீரமைக்க உள்ளது. நடைமேடைகளை பராமரிப்பது, வாகன பார்க்கிங்கை மேம்படுத்துவது, சிதிலமடைந்த மேற்கூரை பூச்சை அப்புறப்படுத்தி புதிதாக பூசுவது, பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள சாலைகளை அமைப்பது, கழிப்பறைகளை புதுப்பிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது.