சென்னை:  மதுரையில் ரூ.114  கோடி மதிப்பிலான மதுரை கலைஞர் நூலகம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சி  காணொலி வாயிலாக நடைபெறுகிறது. ஓராண்டில்  கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு,  மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதுரை புதுநத்தம் சாலையில், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக அங்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில்,  கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையில்,
‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்’ என்ற பெயரில் அமைய உள்ள இந்த நூலகம் 7 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப்படுகிறது.
கீழ் தளத்தில்  250 கார்கள் நிறுத்தும் வகையிலும், நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது.
நூலகத்தின் முகப்பு பகுதியில் கருணாநிதியின் வெண்கல சிலை வைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. நூலகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு அமைக்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமரா வசதி, ஒளி-ஒலி அமைப்புகளுடன் சிறிய அளவிலான அறைகள், குழந்தைகளுக்கான பிரிவுகள் வருகின்றன.
கட்டிடத்தில் 250 மற்றும் 200 பேர் அமரும் வகையில் 2 கூட்ட அறைகள் அமைக்கப்படுகிறது. நூலகத்தில் தமிழ் பிரிவு, ஆங்கிலப்பிரிவு, கலைஞர் பிரிவு மற்றும் குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரிவு உள்ளிட்ட 27 பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் கட்டப்படுகிறது. 7 மாடிகளும் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், ஆன்மிகம் குறிப்பாக சைவம், வைணவம், சங்க இலக்கியம், மொழியியல், வாழ்க்கை சமூகம், அறிவியியல், ஆய்வு மாணவர்களுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு, விருது பெற்றவர்களுக்கான நூல்கள், குடிமைப்பணிகளுக்கான நூல்கள், மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள தேவையான புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்க தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், வேலைவாய்ப்புக்கான நூல்கள் உள்பட 2.5 லட்சம் நூல்கள் வைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும் ஒளி-ஒலி காட்சி கூடம், டிஜிட்டல் அறைகள் போன்றவை சர்வதேச தரத்தில் அமைகிறது.
மின்சார பயன்பாடு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டிடம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுகிறது.
இந்த நூலகம் கட்டுவதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை காணொளி காட்சி மூலம் நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
இந்த நூலகமானது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்போது கட்டப்பட்ட,  அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட தலைமைச்செயலகம் (தற்போது பன்நோக்கு மருத்துவமனை) போன்ற அமைப்பில்,  நவீன வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.