மதுரை:  தேனி அருகே நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்;  என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. புகார் கொடுத்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு வருமானத்தை அள்ளித்தரும் நிறுவனமான  டாஸ்மாக் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், மூலை முடுக்கெல்லாம் கடைகளை திறந்து வருகிறது தமிழ்நாடு அரசு. அதுபோல மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.  அதே வேளையில் இந்த டாஸ்மாக்கால், நாளுக்கு நாள் குடி மகன்கள் பெருகி வருகின்றனர். சமீப காலமகா சிறுவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் குடி மகன்களாக, மகள்களாக மாறி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் பெண்கள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி வருகின்றனர்.  மது அருந்துவோர் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதும், சில நேரங்களில் அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதும் மாணவர்களையும், பொதுமக்களையும் முகம் சுழிக்க வைக்கின்றது. பிரதான சாலைக்கு நடுவே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் ஏராளமான விபத்துகளும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

இது தொடர்பாக நீதிமன்றங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்தாலும் மாநில அரசு வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில்,  தேனி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தில், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் அரபுக்கனி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘பழனிசெட்டிப்பட்டி – பூதிபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. மேலும்இ, சட்டவிரோதமாக மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமகா அந்த பகுதியில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் எனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்துச் சென்றனர். எனவே, பழனிசெட்டிப்பட்டி – பூதிபுரம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடையை மூடவும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முத்துகணபதி, கார்த்திக் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைகிளை  நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதை கண்டித்த நீதிபதிகள்,   “இந்த பிரச்சனை தொடர்பாக 17வழக்குகள் பதியப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காவல்துறையினரை கடிந்ததுடன்,   தற்போது தான் தங்கள் கவனத்திற்கு வந்தது எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்பது ஏற்கும் வகையில் இல்லை. டாஸ்மாக் மேற்பார்வையாளரும், பார் உரிமையாளரும், காவல்துறையினரும் சேர்ந்து கொண்டு இதுபோல நடந்து கொண்டது நிச்சயம் அப்பகுதி மக்களின் சூழலை மிகவும் பாதித்திருக்கும்.

ஆகவே, பழனிசெட்டிப்பட்டி – பூதிபுரம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்படுகிறது. தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.