மதுரை,

கி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் உருவான ஓபி புயல் காரணமாக  தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதத்துக்கு ஆளானது. புயல் குறித்து மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கை விடுக்காததால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட மீனவர்கள் மாயமாயினர்.

இவர்களில் சிலர் வெளி மாநிலங்களில் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 551 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள், அவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் ஓகி புயலின் போது மாயமான 551 மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோலெனின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு ஒகி புயல் குறித்த முறையான முன்னெச்சரிக்கை வழங்கப்படவில்லை.  ஆழ்கடலில் சிக்கியவர்களை காக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஹெலிகாப்டரை அனுப்பி மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தால் ஏராளமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பார்கள் என கூறப்பட்டிருந்தது.

மீனவர் கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17 வரை ஆய்வு நடத்தியதில் 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாததது தெரியவந்திருக்கிறது எனவும், வள்ளவிளையில் 117 பேர், நீரோடி 45 பேர், மார்த்தாண்டந்துறையில் 25 உள்பட மொத்தம் 551 மீனவர்களைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களைக் கண்டுபித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா அமர்வு மீனவர்களை கண்டு பிடிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.