மதுரை: தமிழநாடு லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் வழக்கில் காரசார வாதங்களைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து நீதிபதி விவேக் குமார் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க தனக்கு 3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்க துறையில் பணிபுரியும் துணை இயக்குநர் அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ் பாபுவை அணுகியதாகவும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரத்தின் பேரில், முதல்கட்டமாக ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த லஞ்ச பணத்தை பெற மதுரை அலுவலகத்தைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த வழக்கில் அங்கித் திவாரியை கைது செய்த விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தையும் சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்துச்சென்றனர். பின்னர், அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து. இந்நிலையில் இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு ஜாமீன்
வழங்க வேண்டும் என அங்கு திவாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவில், எனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும்
அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அங்கித் திவாரி ஜாமீன் கோரி ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்திலும் இங்கேயும் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு நீர்த்து போய்விடும் என வாதிட்டார்.
அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஜாமீனுக்கான நிபந்தனை குறித்தும் வாதிட்டார். இது தொடர்பாக காரசாரமான வாதங்கள் நடைபெற்றது. இதனால், கோபமடைந்த நீதிபதி விவேக்குமார் சிங், அங்கித் திவாரி ஜாமீன் கோரிய மனுவை தான் விசாரிக்க விரும்பவில்லை என்றும் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதனால் அங்கித் திவாரி ஜாமின் மனுமீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]