மதுரை: நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை  உயர்நீதிமன்றம் மதுரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளத.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து  நடிகை கஸ்தூரி அவதூறு பேசியதாக, அவர்மீது புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில், தனது பேச்சுக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்து விட்டதாகவும்,   அவதூறு வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரி யிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த  மதுரை உயர்நிதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் விளக்கத்தை ஏற்க மறுத்ததுடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். மேலும், கஸ்தூரியின் பேச்சால்  அண்டை மாநிலத்துடன் பிரச்னை ஏற்படும் என்று கூறிய அரசு வழக்கறிஞர் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று  கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதாவது அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாது பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது.” என்றார்.

மேலும்,  “தமிழகத்துக்கும் கர்நாடகம், கேரளம் இடையே சில பிரச்சினை உள்ளது. தமிழகத்தின் நட்பு மாநிலங்களாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா. திருப்பதி செல்லும் பக்தர்கள் 40 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவ்விரு மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு கஸ்தூரி இவ்வாறு பேசியுள்ளார் என குற்றம் சாட்டினார்.

சென்னைக் கூட்டத்தில் ஒரே கொள்கை உடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழிரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவரைப்போல் மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்றார்.

இந்த நிலையில், கஸ்தூரி முன்ஜாமின் மனுமீது இன்று காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அரசுத் தரப்பு முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

[youtube-feed feed=1]