சென்னை,
கடந்த வாரம் தமிழகத்தை உலுக்கிய ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னப்பின்னாப் படுத்தி சென்றது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஓகி பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மேலும் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன காரணமாக அந்த மாவட்ட மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளானர்கள்.
தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் 3 அமைச்சர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண பணிகள் மேற்கொண்டனர். மாவட்ட அரசு அதிகாரிகளும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயல் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு 5 நாட்கள் முடிந்த நிலையில், இன்னும் அந்த பகுதி மக்கள் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை.
இதன் காரணமாக, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதர அரசுக்கு உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, நீதி மன்றம், ஓகி புயல் பாதித்த குமரி மாவட்டத்தில் அரசு செய்துள்ள அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த விரிவான அறிக்கை வரும் 7ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தது.