பணத்துடன் தொலைந்த பை.  நேர்மையுடன் ஒப்படைத்த தலைமையாசிரியர்
மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த ஜலீல் என்பவர் வங்கிக்குப் பணம் போடுவதற்காகச் சென்று இருக்கிறார். பைக்கில் சென்ற அவர் வெள்ளை நிற பையில் 20 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.  ஆனால் போகும் வழியிலேயே பணப்பை பைக்கிலிருந்து தவறி விழுந்துள்ளது.  இதில் பணம் மட்டுமின்றி அவரின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களும் இருந்துள்ளது.  பையைத் தொலைத்து விட்டு ஜலீல் நீண்ட நேரமாக அதைச் சாலையில் தேடி இருக்கிறார்.  கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அந்த பணப்பையைச் சாலையில் கண்டு எடுத்து இருக்கிறார்  தனக்கன்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் ரமேஷ் பாபு.  உடனடியாக அதை போலீசிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து உடனே அதை போலீசாரிடம் ஒப்படைத்தார்.  உடனே பையிலிருந்த ஆதார் கார்டில் இருக்கும் எண்ணுக்கு போன் செய்து ஜலீலுக்கு இந்த விஷயத்தைத் தெரிவித்தார் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணி.  இதையடுத்து அங்கு வந்த ஜலீல் போலீசாரிடம் இருந்து பையைப் பெற்றுக்கொண்டார். அவரின் பையில் 20 ஆயிரம் ரூபாயில் ஒரு ரூபாய் கூட குறையாமல் அப்படியே இருந்தது. போலீசாருக்கும் அந்த ஆசிரியருக்கும் இதனால் ஜலீல் நன்றி தெரிவித்தார்.
நேர்மையுடன் நடந்து கொண்ட தலைமையாசிரியர் ரமேஷ் பாபுவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
– லெட்சுமி பிரியா