மதுரை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதிக்கு இனி நீதிமன்றம் முன்பு போராட மாட்டேன் என உறுதி அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் இவருக்கு ஜாமீன் வழங்கியதை கண்டித்தும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் டிசம்பர் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
அந்த நேரத்தில் வழக்கறிஞர் தேவேந்திரனுக்கும் மாதர் சங்கத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் தேவேந்திரன் புகார் அளித்தார். இதன் பேரில் பாலபாரதி, ராணி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதிபாசு, அரபு முகமது மற்றும் அடையாளம் தெரியாத 20 பேர் என மொத்தம் 27 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தங்களுக்கு முன்ஜாமீன் கோரி பாலபாரதி, ஜானகி உட்பட 6 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவில் போராட்டத்தின் போது வழக்கறிஞர் தேவேந்திரன் தங்களை மோசமான வார்த்தைகளால் பேசியதால் அவரைக் கண்டித்து கோஷம் எழுப்பிதாகவும் ஆனால் அவர் எங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் அந்தப்புகாரின் பேரில் தங்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதால் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இன்று இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தின் முன்பாகவோ, நீதிமன்ற வளாகத்திலோ இதுபோல் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என பாலபாரதி மற்றும் முன் ஜாமின் மனுத்தாக்கல் செய்திருப்பவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச. 23-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.