மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடைபெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்,  மதுரை திமுக மேயர் இந்திராணி தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவித்தார். இதையடுத்து, இன்று மாமன்றம் கூட்டப்பட்டு, அவரது  ராஜிநாமா ஏற்கப்பட்டது.

இன்றைய மாமன்ற கூட்டத்தில், அதிமுக  – திமுக கவுன்சிலர்கள்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு  நிகழ்வுகள் குறித்து விவாதிக்க அதிமக கவுன்சிலர்கள் வலியுறுத்திய நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில்,  அதிமுக  உறுப்பினர்கள் தர்னா செய்தனர். இதையடுத்து மாமன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, மதுரை மாநகராட்சியில்,  சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடி மோசடி கண்டறியப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றிய தினேஷ்குமார் தலைமையில் 2022–2023 ஆண்டுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் ரூ.150 கோடி வரி வசூலில் மோசடி நடந்தது கண்டறியப்பட்டது. அதிகாரிகளின் பாஸ்வேர்ட்களை தவறாக பயன்படுத்தி வரி குறைப்புகள் செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை தொடங்கினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து முதல்வரின் உத்தரவின்பேரில்  திமுக கவுன்சிலர்கள்  பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அக்டோபர் 15ந்தேதி அன்று  மேயர் இந்திராணி , “குடும்ப காரணங்களுக்காக” தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து  உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவுப்படி, டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், மேயரின் குடும்ப உறுப்பினர்களும் சில மாநகராட்சி அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சூழலில், குடும்ப காரணங்களால் மேயர் இந்திராணி ராஜினாமா செய்வதாக கூறி, ஆணையாளர் சித்ரா விஜயனிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று முன் தினம் வழங்கினார். இதையடுத்து, மேயரின் ராஜினாமாவை ஏற்கும் நடவடிக்கைகள் குறித்து துணை மேயர் நாகராஜன் தலைமையில் ஆணையாளர் சித்ரா விஜயன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று மதுரை மாநகராட்சி அவசர கூட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10.30 மணி அளவில்,  , மாநகராட்சி அவசரக்கூட்டம்  நடைபெற்றது. மதுரை அண்ணா மாளிகை கூட்டரங்கில் துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில்  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜிநாமாவை ஏற்பதாக மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  அப்போது,  திமுக – அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இறுதியாக, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்திராணியின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாக மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மக்களின் முக்கிய பிரச்னைகளைக் கூட்டத்தில் விவாதிக்க மறுத்ததாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டரங்கில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.