மதுரை
மதுரை உரிமையியல் நீதிமன்றம் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரும் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
கமலஹாசன் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில்
”இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது கமலஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து என்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக எனது பெயரும் திரைப்படத்தில் இடம் பெற்றது.
‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமலஹாசன் முதலாம் பாகத்தின் பயன்படுத்திய வர்மகலை முத்திரையை 2 ஆம் பாகத்திலும் அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளார். எனவே‘இந்தியன் 2’ திரைப்படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்
என ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இந்தியன் 2’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு நிதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு விசாரணை ஜுலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது., ‘இந்தியன் 2’ படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.