மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில், திடக்கழிவு மேலாண்மை, சாலை சுத்தம் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் தனியார் மூலம் குப்பை அள்ளும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது, மதுரை, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகள் திடக்கழிவு மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான ஏலங்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய பாஜகஅரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசும் பல்வேறு அரசு திட்டங்களையும், பணிகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஏற்கனவே சென்னையில் குப்பை அள்ளுவது உள்பட, அரசு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு போன்ற பல திட்டங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுரை மாநகராட்சியும் தனியார் மயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலைகளை சுத்தம் செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மதுரை கார்ப்பரேஷன் டெண்டர் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை மாநகராட்சி மாமன்றத்தில், மதுரையில் குப்பை அள்ளுவது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பதில் கூறிய மாநகராட்சி உதவி கமிஷனர், மதுரையில், குப்பை எடுக்கும் பணிக்கு புதிய டெண்டர் விடப்படுகிறது. ஏப்ரல் 1ந்தேதி முதல் முதல் துாய்மை பணிக்கு போதிய ஆட்கள் நியமிக்கப்படுவர் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.