சென்னை:

18 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளிமாநில பார்வையாளர்களை கொண்டு நடத்தப்படும் என்று  தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. மேலும், மதுரை தொகுதிக்கான  வாக்கு எண்ணிக்கை வெளி மாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து எண்ணப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில்  கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கப்பதிவு முடிந்ததும் மதுரையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. இந்த அறைக்குள்  தாசில்தார் நுழைந்ததாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

அதைத்தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவித்த தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் என்று தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் தன்னை மாற்றியது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் மற்றும் அவரது உதவியாளர் இன்று மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், தனது விளக்கத்தை கேட்காமல் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

விசாரணையின்போது  இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. அப்போது,  மதுரை தொகுதிக்கான  வாக்கு எண்ணிக்கை வெளிமாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் உள்ளது என்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவோ மறு தேர்தல் நடத்தவோ உத்தரவிட முடியாது என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.