மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியர் வைகை நதியில் வெள்ளம் அதிகரிக்கும் எனக் கரையோர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து வருஷ நாடு மற்றும் மூல வைகை ஆற்றுப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 553 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து 66.83 அடியாக உள்ளது.
கடந்த ஒரு மாதமாக 1,100 கன அடி நீர் வைகை அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ள நிலையில் , தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் அந்த மழைநீரும் வெள்ளம் பெருக்கெடுத்து வைகை ஆற்றில் வடிந்து வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
வைகை அணையிலிருந்து இன்று காலை நிலவரப்படி 569 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை சிம்மக்கல் அருகே உள்ள வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வைகை ஆற்றின் குறுக்கே உள்ள யானைக்கல் தரைப்பாலத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் இரு பகுதிகளிலும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை ஆற்றில் அதிகமான நீர் வெளியேறி வருவதன் காரணமாகப் பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ , கால்நடைகளை மேய்ச்சலுக்கு இறக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.