மதுரை:

துரையில் சித்திரை திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்  முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.  இதையொட்டி, தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மீனாட்சியம்மன் பட்டாபிஷேக நிகழ்ச்சியும், நேற்று திக்விஜயம் நிகழ்வும் நடந்தது. அதைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிக்கு பல வண்ண பட்டுகள் சூடி, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் சுந்தரேஸ்வரர் மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டினார்.

திருக்கல்யாணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேதராக திருக்கல்யாண மேடையில் தோன்றினார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், தங்கள் கழுத்தில் புதுத் தாலி அணிந்தனர். திருமணம் முடிந்த மீனாட்சி – சுந்தரேஸ்வரர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மீனாட்சி திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர்.

திருக்கல்யாணத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கல்யாண விருந்து கொடுக்கப்பட்டது. நாளை முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.