மதுரை: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த ‘பபாசி’ புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாட்டம் ஆடிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இனிமேல் புத்தக கண்காட்சிக்கும் அரசு தடை விதிக்கப்படுமா? என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது.
சென்னை அரசு பள்ளியில் ஆன்மிக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டு, காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் தொடங்கப்பட்டுள்ள பபாசி புத்தகத் திருவிழாவினை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது, அப்போது பக்தி பாடல்கள் சிலவற்றை ஒலிபரப்பிய நிலையில் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த சில பள்ளி மாணவிகள் திடீரென சாமி ஆடத் தொடங்கினர்.
இந்த விழாவுக்கு பல பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்ட நிலையில், 30க்கும் மேற்பட்ட மாணவிகள் சாமி வந்து ஆடத் தொடங்கினர். இதை அடுத்து அங்கிருந்த சக மாணவிகள் அவர்களை பிடித்து இழுத்து அமர வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தமுக்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா தமுக்க மைதானத்தில் உள்ள மாநாட்டு மைதானத்தில் தொடங்கியது. 11 நாட்கள் அதாவது எதிர்வரும் 16ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. நாள்தோறும் மாலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் தினம்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் பிரபல எழுத்தாளர்களின் பேச்சு, பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் புத்தகத் திருவிழாவினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த நிலையில், தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது , பக்தி பாடல்கள் சில ஒளிரபப்பப்பட்டு ஆடல் நடைபெற்று வந்த நிலையில், புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த சில பள்ளி மாணவிகள் திடீரென சாமி ஆடத் தொடங்கினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது, இதை அடுத்து அங்கிருந்த சக மாணவிகள் மற்றம் ஆசிரியர்கள், அந்த மாணவிகளை அரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, சாமி ஆடி மயங்கி விழுந்த மாணவிகளுக்கு பொதுமக்கள் மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர்களை இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அந்த மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புத்தகத் திருவிழாவில், பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது தொடர்பாக அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுவும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசும் பொருளாக மாறி உள்ளது. பள்ளிகளில் இனிமேல் அரசு அனுமதியின்றி எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என தடை வித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இனிமேல் புத்தக கண்காட்சி அல்லது புத்தக கண்காட்சியில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே பாடல் ஒலிபரப்பப்பட்டதாகவும், மாணவிகள் மகிழ்ச்சியாக ஆடியதால் தான் பாடல் தொடர்ந்து ஒலிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடலுக்கு ஆடிய மாணவிகள் யாரும் மயங்கவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.