மதுரை: தூய்மையான விமான நிலையங்கள் பட்டியலில் மதுரைக்கு முதலிடம் கிடைத்துள்ளது

நாட்டின் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பயணிகளின் சேவைத்தர மதிப்பீட்டில் மதுரைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு  1.5 மில்லியன் முதல் 5 மில்லியன் பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் நாட்டின் தூய்மையான மற்றும் பாதுகாப்பான விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் 34 விமான நிலையங்களில் துாய்மை பட்டியலில் முதலிடம் பிடித்த மதுரை விமான நிலையத்துக்கு ஆலோசனைக்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழுக் கூட்டம் குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள் கலெக்டர் அனீஷ் சேகர், வெங்கடேசன் எம்.பி., போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை, விமான நிலைய அதிகாரி பாபுராஜ், மத்திய தொழிலக பாதுகாப்புப்படை அலுவலர் உமாமகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது 2 ஷிப்டுகளில் இயங்கும் விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை பார்லிமென்டில் வலியுறுத்துவது. தேவைப்பட்டால் தென்மாவட்ட எம்.பி.,க்கள் விமானத்துறை அமைச்சரை சந்திப்பது, விமான நிலையத்திற்கு கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்துவது என ஆலோசித்தனர்.  இதனையடுத்து ஆலோசனை குழு உறுப்பினர்கள் விமான நிலைய அதிகாரிகளை பாராட்டினர்.