சபரிமலையில் வாவரை தரிசித்த பின்னர் ஐயப்பனை தரிசித்தது போல அயோத்தியில் மசூதியில் வழிபட்டுவிட்டு, ராமரை வணங்கி மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குறிய அயோத்தி நில வழக்கில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும், மசூதி அமைக்க ஆயோத்தியிலேயே 5 ஏக்கர் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், “இந்தத் தீர்ப்பை நாங்கள் மனமாற வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பு இந்துக்கள் பெருமை கொள்ளவோ, இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ளக் கூடிய தீர்ப்போ அல்ல. அயோத்தி தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது யாருக்கும் பாதகமான தீர்ப்பு அல்ல. தீர்ப்பை ஒட்டி எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படக்கூடாது. இது நல்ல, நியாயமான எல்லோரும் ஏற்க வேண்டிய தீர்ப்பு. சட்டத்தை முன்வைத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. ராமர் கோயிலை கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவும் வரவேற்கத்தக்கது.

எப்படி, சபரிமலையில் வாவரை தரிசித்த பின் தான், ஐயப்பனை வணங்குகிறோம், அதே போல் அயோத்தியில் மசூதி சென்று வழிபட்டு ராமரை வணங்கி மதநல்லிணகத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்துக்கள் அயோத்தி சென்றால் ராமர் கோயிலுக்கும் செல்ல வேண்டும் பாபர் மசூதிக்கு செல்ல வேண்டும்” என்றார்.