மதுரை: கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே திருவண்ணாமலை கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது, மதுரை கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக வளாகங்கள் கட்டக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கோவில் சொத்துக்கள் மற்றும் உபரி நிதியை வழிபாட்டுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், வணிக நோக்கங்களுக்கு அல்ல என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

HR&CE சட்டம் 1959-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட வழிபாட்டு மற்றும் அறப்பணிகளுக்கு மட்டுமே உபரி நிதியைப் பயன்படுத்த வேண்டும். கோவில் நிலங்களில் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற வணிக ரீதியிலான கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது. கோவில் நிதியில் வணிகக் கட்டிடங்களைக் கட்டுவது, அவ்வாறு நிதியளித்தவர்களின் உண்மையான நோக்கத்திற்கு முரணானது என நீதிமன்றம் கருதுகிறது. இந்தத் தீர்ப்பு, தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களுக்கும் பொருந்தும்.

கோவில் சொத்துக்கள் மற்றும் நிதியை வணிகமயமாக்குவதைத் தடுத்து, அதன் புனிதத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில்,  மதுரை மாவட்டம், வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்த பிரபு, நாகப்பட்டினம் திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் சௌரிராஜன் ஆகியோா் தனித் தனியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்களில், மதுரை அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டடங்கள் கட்டுப்பட்டு வருகின்றன. இதுகுறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.  கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்களை  விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவில்,  கள்ளழகா் கோயிலில் அறங்காவலா் குழு இல்லாமல், உபரி நிதியைப் பயன்படுத்தி வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், கோயிலின் உபரி நிதியை அரசு தனிப்பட்ட சொத்தாகக் கருதி முடிவெடுக்க முடியாது. எனவே, கள்ளழகா் கோயில் நிதி ரூ.40 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கெனவே கோயில் நிதி ரூ.107 கோடி இருந்ததாகத் தெரிகிறது. இது தற்போது ரூ.62 கோடியாகக் குறைந்துள்ளது. இது தெய்வக் குற்றம்; வேலியே பயிரை மேய்ந்த கதையாகும். கோயிலின் நிதி யாரால், எவ்வாறு தணிக்கை செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, கோயிலில் தணிக்கை எப்படி செய்யப்படுகிறது என்ற விவரங்களை 2 வாரங்களுக்குள் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும்.

கள்ளழகா் கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். செயல் அலுவலா் நியமிக்கப்பட்டு 5 ஆண்டு களுக்கு மேலாகியிருந்தால், அவரை நீக்கிவிட்டு நிா்வாகம் தெரிந்தவரை நியமிக்கலாம் என விதிகள் உள்ளன.

கள்ளழகா் கோயில் நிா்வாகம் தொடா்பாக சட்டம், விதிமுறைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கோயிலின் வசந்த மண்டபச் சுவா்களில் மகாபாரதக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருப்பது வேதனை யளிக்கிறது. இந்த ஓவியங்களைப் பராமரிக்க வேண்டும்.

நிகழாண்டு வைகாசி மாத விழாவுக்குள் வசந்த மண்டபம் சீரமைக்கப்பட வேண்டும். கோயிலின் பழைய நினைவுச் சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டு மானங்கள் மேற்கொள்ளக் கூடாது. இந்தக் கோயிலில் கால்நடைகளை வதைப்பது நீண்ட காலமாக வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது பக்தா்களின் நம்பிக்கையையாக இருப்பதால், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

பணியாளா் குடியிருப்புகள் கோயில் வளாகத்தில் உள்ள அக்னி புஷ்கரணிக்கு அருகே கட்டப்படுகின்றன. இதனால், அக்னி புஷ்கரணி மாசுபடும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. அக்னி புஷ்கரணிக்கு மிக அருகில் பணியாளா் குடியிருப்புகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது. எனவே, பணியாளா் குடியிருப்பு, கழிவுநீா் சுத்திகரிப்புத் திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்தத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை கோயில் நிா்வாகத்துக்கு தமிழக அரசு உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும். கோயில்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான ஒப்புதல்களைப் பெற வேண்டும். இருப்பினும், அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் பெறாமல் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என கோயில் நிா்வாகம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டி ருக்கிறது. இதேபோல, கோயிலில் மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு அருகே கட்டப்பட்ட கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவற்றை நீதிமன்றம் பதிவு செய்கிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடா்பாக 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை  ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…

சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் அரசாணைக்கு தடை! உயர்நீதி மன்றம்

கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும் உத்தரவிட்டது உயர்நீதி மன்றம்…

[youtube-feed feed=1]