சென்னை:

டற்கரை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவை திறக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், விழா நடத்தாமல் வளைவை திறக்க வேண்டும் என்றும், 5 நிமிடத்திற்குள் விழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்றும்  நிபந்தனை விதித்துள்ளது.


சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் எழிலகம் அருகே  எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில்  ரூ.2.52 கோடி ஒதுக் கப்பட்டு,பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை சென்னைஉஉயர்நீதிமன்ற நீதிபதிகள் சேஷசாயி, சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த விசாரணையின்போது,   எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு கட்டுமான பணிகள் நடைபெறலாம் ஆனால்,  திறக்கக்கூடாது என தடை விதித்து இருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில்,  எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள நினைவு வளைவை திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்?  அவரின் கொள்கை, கருத்துகளை பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர், காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கெனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா?  இதுபோன்ற எந்த திட்டத்துக்காவது செயல்திட்டத்தை உருவாக்கி விட்டு வாருங்கள். அதுவரை திறக்க அனுமதிக்க மாட்டோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து  வாதாடிய மனுதாரர் வழக்கறிஞர்.   அண்ணா நினைவாக நூலகம் கட்டியுள்ளார்கள். அதுபோல எம்ஜிஆர் நினைவாக கட்டலாம் என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிவாஜி நினைவாக மணிமண்டபம் கட்டினார்கள். அதில் யார்? என்ன? பலனடைகிறார்கள்? அதுகூட நீர்நிலை இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவை   ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்றும், மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி வழங்கி வழக்கை பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.