திருவாரூர்:

‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’. கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’  என்று  கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.

“தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்” என்ற தலைப்பில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முதல் கூட்டம்  திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது,  கிராமம் தான் தேசத்தின் உயிர்நாடி, என்றும் கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது என்றார். கிராமம் என்பது ஒரு கோயில் போன்றது என கிராம சபை கூட்டத்தில் பேசினார். காந்தி முதல் கக்கன்வரை இன்றும் நாம் பேசப்பட்டு வருவதற்க காரணம் அவர்களின் எளிமைதான். அரசியலையும் தாண்டி அனைவர் மனதிலும் நச்சென ஒட்டிக் கொண்டதற்கு காரணம் வெகு ஜன மக்களுடன் அவர்கள் கலந்ததுதான்.

இந்த பார்முலாவை  எம்ஜிஆர் இறுதி வரை சிறப்பாகவே கையாண்டார். கடைசிவரை பொதுமக்களுடன் ஒன்றிணைந்து இருந்ததை யாராலும் பிரிக்க முடியவில்லை… மக்களை தன்னிடமிருந்து பிரிக்காதவாறும் கடைசிவரை இருந்தார் எம்ஜிஆர் ஆனால் எம்ஜிஆருக்கு பிறகு மக்களோடு மக்களாக கலப்பவர்கள் வெகுசிலரே என்ற நிலைமைதான் ஏற்பட்டது.

ஆனால், தற்போது தேர்தல் சமயங்களில் கட்சி பாகுபாடு இன்றி எல்லோருமே மக்களை தேடி குறிப்பாக கிராமங்களை தேடி ஓடுகிறார்கள். கிராமங்களில் இருந்து தான் அரசியலே உருவாவதாக கூறிய அவர், படித்தவர்கள் ஓட்டுப்போட வராமல் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கடமை குறித்து மக்களுக்கு விளக்கிய ஸ்டாலின், மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையர் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்

கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக தரையில் ஜமுக்காளம் விரித்து அதில் அமர்ந்து பேசினார். அவரது இருபுறமும் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. செருப்பு போடாமல் சம்மனம் போட்டு அமர்ந்து பேசிய  ஸ்டாலின் எளிமையான நடவடிக்கை மக்களிடையேபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.