சென்னை: தமிழ்நாட்டின் பிரபல கோயில்களில், மாநில அரசின் நிர்வாக அதிகாரிகள் இருப்பது சட்டவிரோதம் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கமளிக்க, மாநில இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர், இந்தப் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்காக, மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகி வாதாடினார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், கடந்த 2005ம் ஆண்டு தான் பெற்ற தகவலின் அடிப்படையில், தமிழ்நாட்டின் 60 பிரபல ஆலயங்களில், மாநில அரசின் நிர்வாக அதிகாரிகள் இருப்பது தெரியவந்தது. இந்த ஏற்பாடு ஒரு சட்டவிரோதம்.
ஸ்ரீரங்கத்தின் ரங்கநாதர் ஆலயம், சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வர் ஆலயம், திருத்தணி மற்றும் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி ஆலயங்கள் ஆகியவற்றில் நிர்வாக அதிகாரிகள் இருப்பது சட்டத்திற்கு எதிரானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பல சட்டப் பிரிவுகளும் மனுதாரர் தரப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.