சென்னை:

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குறிய வார்த்தைகளை சமூக வலை தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை நான் வெளியிடவில்லை. வேறு ஒருவர் பதிவிட்டதை தான் நான் பகிர்ந்தேன் என்று அவர் வாதிட்டு வருகிறார்.

இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து எஸ்.வி.சேகரை தேடி வருகின்றனர். இதனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதற்கிடையில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பான உத்தரவில், ‘‘ சமூக வலை தளத்தில் ஒருவர் பதிவிட்ட கருத்தை மற்றவர்களுக்கு பகிர்வது என்பது அந்த கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம். அந்த கருத்தை ஆமோதிப்பதாகும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் பிறர் பதிவுகளையும் நாம் பகிர்ந்தால் அதற்கும் நாம் தான் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.