சென்னை: சினிமா தயாரிப்பு கடன் சம்பந்தமாக,  பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த  நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில்  நடிகர் விஷால் இரண்டுமுறை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம்  இரண்டரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக,  நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை தங்களுக்கே வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாக கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் உயர் நீதிமன்றத்தில்  கடந்த 2024ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

.இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நீதிபதி பி.டி. ஆஷா முன்பாக நடிகர் விஷால்  ஆஜரானார். விஷாலிடம் லைகா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, திரைப்படத் துறையில் படத்தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது என்றும், லைகா நிறுவனத்துக்கு எதிராக விஷால் தொடர்ந்த வழக்கு உள்பட மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விஷால் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பதிலளித்தார்.

இந்த வழக்கில் குறுக்கு விசாரணை முடிவடைந்த அடுத்து, வழக்கு விசாரணையை கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மீண்டும் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.